Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Sunday, 23 August 2009

ஈயும் நானும்..

அழ முடியாமல் அழுது கொண்டிருந்தேன்..! எதற்காகவோ பயந்தேன்..! எதிலிருந்தோ தப்பிக்க முயன்றேன்..! தப்பித்தால் செத்துவிடுவேன் என்று தெரிந்ததும் அழுகை இன்னும் இன்னும் குமுறி வெடித்தது. வெடித்தால் அக்கம் பக்கத்தில் விழித்துக் கொண்டு கேள்வி எழுப்புவார்கள் எனப் பயந்து, வாயை இறுக மூடிக்கொண்டேன். மூக்கு விடைத்தது.. மூக்கையும் மூட முடிந்தால்.. என்று சிந்தனை ஓடியது.

பைத்தியம் என்று தெரியும். முற்றி விட்டதோ என்று யோசித்தேன். வைத்திய உதவியை நாட வேண்டுமா என்று ஆலோசித்தேன். தொடர்புடன் கூடிய படங்கள், மனத்திரையில் படமாக ஓடியது. தலைக்கு மேல் ஒரு ஈ மணிக்கணக்காகச் சுற்றிச் சுற்றி வந்து இம்சித்தது. அது உட்கார்ந்த இடம் மண்டை ஓடாயினும் அரித்தது. ஈ கடிக்குமா என்று யோசனை ஓடியது. அடிக்கக் கை துடித்தது. போய்விடும் என்று அடக்கிக் கொண்டேன்.

ஏன் என்னை துன்புறுத்துகிறாய் என்று எங்கிருந்தோ கேள்வி வந்தது. அப்போ என்னை யாரும் இம்சிக்கவில்லையா என்று கேட்டுக் கொண்டேன். பதிலாக விரக்தியுடன் கூடிய சிரிப்பை உதிர்த்தேன். விளையாட்டாக இருக்கிறதா என்று எதிரொலி வந்தது. ஈ நான்காவது தடவையாக நெத்திப் பொட்டில் ஒரே இடத்தில் கடித்தது. கை உயர்த்தி நெத்தியில் தட்டினேன்.

ஈ என்னுடன் விளையாட ஆரம்பித்து, அங்கும் இங்குமாக இம்சை செய்தது. கண் முன்னே நாட்டியம் ஆடியது. உற்றுப் பார்த்து, இரண்டு கையும் சேர்த்து பளார் என்று அடித்தேன். ஈ கைகளுக்குள் சிக்கி கீழே விழுந்தது. தூக்கி நிலத்தில் போட்டேன். துடியாய் துடித்தது. நான் துடித்தெழுந்து, ஓடிச் சென்று துடிக்க விடாது அடிக்கப் பார்த்தேன். முடியவில்லை, சின்னஞ்சிறிய சிறகைப் பிடித்துத் தூக்கி உள்ளங்கையில் வைத்துப் பார்த்தேன். துடித்தது. ஒரு இறகு மடங்கி இருந்தது. ஒரு இறகு சாதாரணமாக இருந்தது. மடிந்த இறகில், மெதுவாக வாயால் ஊதினேன். பலன் இருப்பதாகத் தெரியவில்லை. கீழே போட்டேன்.

வந்து உட்கார்ந்து கொண்டு பைத்தியத்தில் ஆழ்ந்தேன். ஈயை கண்ணிலிருந்து அகற்ற முடியவில்லை. அது மெது மெதுவாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தது. திடீரென்று நிச்சலனமாய் இருந்தது. செத்து விட்டதோ என்று பார்த்தேன். விர்ரென்று மின்விசிறி போன்று நின்ற இடத்திலேயே வேகமாகச் சுற்றியது. நிறுத்தி மீண்டும் நடந்தது. மீண்டும் அசையாமல் இருந்தது.

என் கண் அதன் மேலேயே இருந்தது. அது அசைவதாகக் காணோம். சென்று பார்க்கத் துணிவில்லை. குற்ற உணர்வு தாக்கியது. உணர்ந்தது போல், ஈ கொஞ்சம் அசைந்தது. கண்கள் களைத்து விட்டிருந்தன.

படுக்கலாம் என்று தோன்றியது. கால் மடித்திருந்ததில் உணர்விழந்து போயிருந்த கால்களை மெதுவே நீட்டினேன். படுக்கையைச் சரி செய்தேன். கண்ணை லேசாக மூடினேன், காலையில் ஈயை மறந்து விடுவேன் என்ற நம்பிக்கையுடன்.