Wednesday, 28 October 2009

நோண்டும் துன்பம்...

தனியே.. தன்னந்தனியே.. அழுவது.. மிகவும் பிடிக்கிறது.. ஆனால்... அழுது தீர்க்க முடியவில்லை.. நாசமா போன தலை.. வலித்து... வலித்து இழுக்கிறது... இன்னும் கொஞ்சம்... இன்னும் கொஞ்சம்.. கெஞ்சும் கண்ணும்.. கெஞ்சும் மனதும்.. வெடித்து வெடித்துக் கரைகிறது... மண்டையோடு.. என் இதயத்தை விடக் கல்லாக இருக்கிறது... கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்காது அடம் பிடிக்கிறது..
என்ன இல்லை.. என்ன இல்லை.. என்ன இல்ல்ல்ல்ல்லை ... எல்லாம் இருந்தும்.. எல்லாம் இருந்தும்... எல்லாம் இருந்தும்... என்ன இல்லை... என்ன இல்லையெனினும்.. எனக்கு எதுவும் வேண்டாம்.. என்னைத் தனியே விடுங்கள்..
என்ன..ஏன்.. எதற்கு.. எப்படி... மாற்றி மாற்றி... கேள்விகள்... குடைச்சல்கள்... சொன்னால் என்ன செய்து விடப் போகிறீர்கள்..? சொல்வது சரிதான்... என்று தலை அசைக்க முடியுமா..? சரியில்லை என விரல் அசைக்க முடியுமா..?
பசப்பு வார்த்தைகள்.. பாழாய்ப் போன சுயநலத்தால்.. இன்றைக்கு ஏதோ தேவை.. ஓட்டி விடலாம்.. நாளைக்கு சமாளித்துக் கொள்ளலாம் என்ற.. மிதப்பு...
அதுக்கென்ன செய்வது.. அவள் தலைவிதி என்று சொல்லக் கூடிய ஒரு அறணை... வேறொரு கால கட்டத்தில்.. இடம் மாற்றி இதையே மொழிதல்.. இயல்பானதில்லையா...
ஆ... நரகம்.. திரும்பவும்.. திரும்பவும்... முடிவே இல்லாத... இந்த நரக வாக்கு வாதம்... நரக வாழ்வு.. இதற்குள்.. உழல்வதே கதியா.. இதுவே விதியா...
வேண்டாம்.. என்னைத் தனியாக விடுங்கள்... நோண்டுவதற்கு உங்களுக்குக் கதியா இல்லை...

Sunday, 23 August 2009

ஈயும் நானும்..

அழ முடியாமல் அழுது கொண்டிருந்தேன்..! எதற்காகவோ பயந்தேன்..! எதிலிருந்தோ தப்பிக்க முயன்றேன்..! தப்பித்தால் செத்துவிடுவேன் என்று தெரிந்ததும் அழுகை இன்னும் இன்னும் குமுறி வெடித்தது. வெடித்தால் அக்கம் பக்கத்தில் விழித்துக் கொண்டு கேள்வி எழுப்புவார்கள் எனப் பயந்து, வாயை இறுக மூடிக்கொண்டேன். மூக்கு விடைத்தது.. மூக்கையும் மூட முடிந்தால்.. என்று சிந்தனை ஓடியது.

பைத்தியம் என்று தெரியும். முற்றி விட்டதோ என்று யோசித்தேன். வைத்திய உதவியை நாட வேண்டுமா என்று ஆலோசித்தேன். தொடர்புடன் கூடிய படங்கள், மனத்திரையில் படமாக ஓடியது. தலைக்கு மேல் ஒரு ஈ மணிக்கணக்காகச் சுற்றிச் சுற்றி வந்து இம்சித்தது. அது உட்கார்ந்த இடம் மண்டை ஓடாயினும் அரித்தது. ஈ கடிக்குமா என்று யோசனை ஓடியது. அடிக்கக் கை துடித்தது. போய்விடும் என்று அடக்கிக் கொண்டேன்.

ஏன் என்னை துன்புறுத்துகிறாய் என்று எங்கிருந்தோ கேள்வி வந்தது. அப்போ என்னை யாரும் இம்சிக்கவில்லையா என்று கேட்டுக் கொண்டேன். பதிலாக விரக்தியுடன் கூடிய சிரிப்பை உதிர்த்தேன். விளையாட்டாக இருக்கிறதா என்று எதிரொலி வந்தது. ஈ நான்காவது தடவையாக நெத்திப் பொட்டில் ஒரே இடத்தில் கடித்தது. கை உயர்த்தி நெத்தியில் தட்டினேன்.

ஈ என்னுடன் விளையாட ஆரம்பித்து, அங்கும் இங்குமாக இம்சை செய்தது. கண் முன்னே நாட்டியம் ஆடியது. உற்றுப் பார்த்து, இரண்டு கையும் சேர்த்து பளார் என்று அடித்தேன். ஈ கைகளுக்குள் சிக்கி கீழே விழுந்தது. தூக்கி நிலத்தில் போட்டேன். துடியாய் துடித்தது. நான் துடித்தெழுந்து, ஓடிச் சென்று துடிக்க விடாது அடிக்கப் பார்த்தேன். முடியவில்லை, சின்னஞ்சிறிய சிறகைப் பிடித்துத் தூக்கி உள்ளங்கையில் வைத்துப் பார்த்தேன். துடித்தது. ஒரு இறகு மடங்கி இருந்தது. ஒரு இறகு சாதாரணமாக இருந்தது. மடிந்த இறகில், மெதுவாக வாயால் ஊதினேன். பலன் இருப்பதாகத் தெரியவில்லை. கீழே போட்டேன்.

வந்து உட்கார்ந்து கொண்டு பைத்தியத்தில் ஆழ்ந்தேன். ஈயை கண்ணிலிருந்து அகற்ற முடியவில்லை. அது மெது மெதுவாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தது. திடீரென்று நிச்சலனமாய் இருந்தது. செத்து விட்டதோ என்று பார்த்தேன். விர்ரென்று மின்விசிறி போன்று நின்ற இடத்திலேயே வேகமாகச் சுற்றியது. நிறுத்தி மீண்டும் நடந்தது. மீண்டும் அசையாமல் இருந்தது.

என் கண் அதன் மேலேயே இருந்தது. அது அசைவதாகக் காணோம். சென்று பார்க்கத் துணிவில்லை. குற்ற உணர்வு தாக்கியது. உணர்ந்தது போல், ஈ கொஞ்சம் அசைந்தது. கண்கள் களைத்து விட்டிருந்தன.

படுக்கலாம் என்று தோன்றியது. கால் மடித்திருந்ததில் உணர்விழந்து போயிருந்த கால்களை மெதுவே நீட்டினேன். படுக்கையைச் சரி செய்தேன். கண்ணை லேசாக மூடினேன், காலையில் ஈயை மறந்து விடுவேன் என்ற நம்பிக்கையுடன்.